தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து மே 27 ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்த உள்ளது.
ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் கோடை மழை காரணமாக தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுவாக கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு ஜூன் வாரத்தில் இருக்கும். ஆனால் ஜூன் 4 ஆம் தேதி மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. மேலும், தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என்றுக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் கோடை வெப்பம் என்பது தமிழகத்தில் வெளுத்து வாங்கியதால், குழந்தைகளின் நலன் கருதி பள்ளி திறப்பை தள்ளிவைக்கலாமா? என்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் முதற்கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்க, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் மே 27 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும். முன்னதாக ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“