/indian-express-tamil/media/media_files/2025/05/20/m33baRUmMeKpZ54u0zOd.jpg)
டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி படித்தவர்கள் மற்றும் பி.எஸ்.சி பட்டதாரிகள் பி.இ, பி.டெக் படிப்பில் நேரடியாக 2 ஆம் ஆண்டு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 6 ஆம் தேதி முதல் தொடங்குவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் கணிதத்தை முதன்மை பாடமாகவோ அல்லது துணை பாடமாகவோ கொண்டு இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள், இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறலாம். மேலும் நேரடியாக 2 ஆம் ஆண்டில் சேர்க்கை பெற முடியும். இதற்காக தனி விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வு நடைபெறும். இந்த நிலையில் இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; பொறியியலில் டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள், பி.எஸ்.சி பட்டதாரிகள் (கணிதத்தை குறைந்தபட்சம் துணை பாடமாக படித்திருக்க வேண்டும்) ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் பி.இ, பி.டெக் படிப்பில் நேரடியாக 2 ஆம் ஆண்டு சேரலாம்.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) பொறியியல் பட்டப்படிப்பில் நேரடியாக 2 ஆம் ஆண்டு சேருவதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பி.எஸ்.சி பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் www.tnlea.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ரூ.500. எஸ்.சி எஸ்.டி பிரிவினராக இருந்தால் ரூ.250. பதிவுக்கட்டணத்தை விண்ணப்பிக்கும்போதே ஆன்லைனில் செலுத்திவிடலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இல்லாத மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேவை மையத்தை (TFC) பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.