தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு தேதிகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்களில் 85 சதவீத இடங்கள் மாநில அரசின் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு ஒதுக்கப்படும். இதன் அடிப்படையில் 785 எம்.பி.பி.எஸ் இடங்கள் மத்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டன.
செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் (DGHS) கவுன்சிலிங்கின் முடிவில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 86 இடங்கள் காலியாக இருந்தன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 இடங்கள், மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) மூன்று இடங்கள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் 17 இடங்கள் என மொத்தம் 86 இடங்கள் காலியாக இருந்தன.
இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதி இருந்தது. இந்த நிலையில் இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, இளநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 86 இடங்களுக்கும் தமிழக அரசே கலந்தாய்வு நடத்தும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவம்பர் 7 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பான தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்குமாறு தமிழ்நாடு மருத்துவக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“