தமிழகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 15) நடைபெற உள்ள கல்விக்கடன் சிறப்பு முகாமில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பொருளாதார வசதியற்ற மாணவர்கள் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் கல்விக்கடன் பெற அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழக கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக் கடன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை கல்விக் கடனாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.5 லட்சம் வரை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு எளிதாக கல்விக்கடன் பெறுமாறு மாணவர்கள் பெற்றோர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு, சாதி சான்றிதழ், பெற்றோரின் ஆண்டு வருமான சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், கல்லூரி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்று (தேவை இருப்பின்), கல்லூரி சேர்க்கை அல்லது ஒப்புதல் கடிதம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றின் நகல்களையும் தயாராக எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கல்விக் கடன் சிறப்பு முகாம் தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எல்லோரும் கல்வி கற்க பள்ளி - கல்லூரிகளை திறந்தார்கள். கட்டணமில்லா பஸ் பயணம் - உதவித்தொகை - முதல் தலைமுறை பட்டதாரிக்கு கட்டண விலக்கு என்ற கலைஞர் அவர்களின் வழியில், கல்வி வளர்ச்சிக்காக காலை சிற்றுண்டி திட்டம் - புதுமைப்பெண் திட்டம் - நான் முதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், பட்டப்படிப்புக்காக சேரவுள்ள மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கில் நம் திராவிட மாடல் அரசு தமிழ் நாடெங்கும் மாவட்ட ஆட்சியர்கள் வளாகத்தில் சிறப்பு 'கல்விக்கடன் முகாம்களை' நாளை நடத்துகிறது. இந்த முகாம்களில் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்று பயனடைய மாணவ - மாணவியர்களை வாழ்த்துகிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“