தமிழ்நாடு புதிய கல்வி கொள்கையை எதிர்த்தாலும், மறைமுகமாக அவற்றில் உள்ள முக்கிய பரிந்துரைகளை இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் போன்ற திட்டங்கள் வாயிலாக அமல்படுத்தி வருவதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
கல்வி பிரிவில் ஸ்டாலின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இத்தகைய யோசனைகள் ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கை 2020இல் ஏற்கனவே உள்ளது. இது நாட்டின் இளைஞர்களின் கல்வி சாதனைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திறன் சார்ந்த கல்வியும், பயிற்சியும் பாட திட்டத்தில் கட்டாயமாக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு, கல்வியை வெறும் பட்டப்படிப்பு சார்ந்ததாக இல்லாமல் 'வேலைவாய்ப்பு சார்ந்ததாக' மாற்றுவதன் ஆர்வத்தை காட்டுகிறது. தேசிய கல்விக்கொள்ளை 2020 இன் நோக்கமானது, இந்திய இளைஞர்களிடையை புதுமையை புகுத்துவது மட்டுமின்றி வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்துவதாகவும். முதல்வரின் அறிவிப்பு சிறந்த திட்டமாகும்.
தேசிய கல்விக் கொள்கை என்பது முழுமையான மற்றும் விரிவான சிறந்த உள்ளடக்கங்களை கொண்டது. இந்திய மாணவர்கள், 21 ஆம் நுாற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வகையில், இந்த கொள்கை அமைக்கப்பட்டுள்ளது.
யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் என்எம்சி போன்ற தரநிலை அமைப்பு மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தேசிய வழிகாட்டுதல்களைப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றுவது கட்டாயமாகும்.
இது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இந்த அமைப்புகள் ஏற்கனவே படிப்படியாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. மாநில அரசு வழிகாட்டுதலை பின்பற்றாதவரை, தமிழ் மாணவர்கள் தேசிய கல்வித் திட்டத்தின் பலன்களைப் பெற மாட்டார்கள் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil