இந்த ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தவிர, அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 83 எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்கள் வீணாகாமல் இருக்க உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டுமா என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்கள் உட்பட முன்னெப்போதும் இல்லாத அளவு 80 எம்.பி.பி.எஸ் இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டின் நான்கு சுற்று கவுன்சிலிங்கிற்குப் பிறகும் காலியாக உள்ளன. இது தவிர, மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் உள்ள 50 எம்.பி.பி.எஸ் இடங்களில் மூன்று இடங்களும் காலியாக உள்ளன. அரசு உட்பட கவுன்சிலிங் கமிட்டி மற்றும் அனைத்து மருத்துவக் கல்லூரிகள், உச்ச நீதிமன்றத்தை அணுகி, கூடுதல் சுற்று கவுன்சிலிங்கிற்கு அனுமதி பெறாவிட்டால், இந்த இடங்கள் அனைத்தும் ஐந்தரை ஆண்டுகள் முழுப் படிப்பு காலத்திற்கு காலியாகவே இருக்கும்.
இதேபோல் இந்திய அளவில் 2000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இதில் 600 இடங்கள் கட் ஆஃப் தேதிக்குப் பின்னர் சேர்க்கை பெற்றதால் செல்லாதது என அறிவிக்கப்பட்டவை.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சட்ட நிபுணர்களுடன் விவாதித்து வருகிறோம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்ததாக சனிக்கிழமை TOI செய்தி வெளியிட்டுள்ளது. “உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டுமா என்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். எம்.பி.பி.எஸ் இடங்கள் வீணடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை,'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆறு எம்.பி.பி.எஸ் இடங்கள் வீணாகின.
மருத்துவ சேர்க்கை நடைமுறைகளை முடிக்க செப்டம்பர் 30 ஆம் தேதி கட் ஆஃப் தேதி என உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அதாவது அக்டோபர் 13 ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கடிதம் எழுதியுள்ளார் இதற்கு மத்திய அமைச்சர் இதுவரை பதில் அளிக்கவில்லை.
இருப்பினும், கட்-ஆஃப் தேதிக்குப் பிறகு செய்யப்படும் சேர்க்கைகள் செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலோசித்து காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
தமிழகத்தில் 1%க்கும் குறைவான எம்.பி.பி.எஸ் இடங்களே காலியாக உள்ளன. அதிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 0.2%க்கும் குறைவான இடங்களே காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங்கை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசால் அனுமதி பெற முடியாமல் போகலாம், என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த காலியிடங்கள் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தொடர் பிரச்சனைகளால் இருக்கைகள் நிரப்பப்படவில்லை. முதல் சுற்றில் ப்ரீ-எக்ஸிட் விதி பல இடங்கள் காலியாக இருக்க வழிவகுத்தது. மத்திய மற்றும் மாநில கவுன்சிலிங் கமிட்டி இரண்டும் மீதமுள்ள காலியிட சுற்றில் மட்டுமே மாணவர்களை விலக்குவோம் என்று கூறியது. ஆனால் இந்த சுற்று ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. இரண்டு கவுன்சிலிங்கிலும் மாணவர்கள் இடங்களைத் தேர்வுசெய்துவிட்டு, ஒரு இடத்தில் சேர்க்கை பெற்றனர். அதனால் பல இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளன, என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“