தமிழகத்தில் அரசு & அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக தேசிய அளவிலான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து அகில இந்திய வானொலி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணைய தளம் வாயிலாக IIT, JEE தேசிய அளவிலான தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இணைய தளம் வாயிலாக இலவசமாக பயிற்சி அளிப்பதற்கு பள்ளி கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இப்பயிற்சிக்கான பதிவை இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை மேற்கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக பொதுத் தேர்வுகள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுடன் காணொலி (#EducationMinisterGoesLive) வாயிலாக உரையாடிய மத்தியக் கல்வி அமைச்சர், " மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் அடுத்த கல்வி ஆண்டில் சேர்வதற்கான 2021 ஜேஇஇ தேர்வை மாணவர்கள் ஒன்று முதல் நான்கு முறை வரை எழுதலாம்" அமைச்சர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் ( மார்ச் , ஏப்ரல் & மே -2021) தேர்வு நடைபெறும் என்றும், மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு முறையும் தேர்வை எழுதலாம் என்றும், மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும் என்றும், மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.