தமிழ்நாடு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT), 4 மற்றும் 5 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் அடிப்படையில் டிஜிட்டல் வாயிலாக வீடியோ பாடங்களை விரைவில் தயாரிக்கவுள்ளது.
தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம் என்பது 8 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான உரை வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணித இயக்கத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அடுத்தக் கட்டமாக 4 மற்றும் 5 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீடியோ பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இதற்காக, பாடம் வாரியாக வீடியோ பாடங்களை தயாரிக்கும் பணி, 10 மாவட்டங்களில் உள்ள மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு (DITE) ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் பாடங்களுக்கான வீடியோ பாடங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியிலும், ஆங்கில பாடங்கள் கோவை மற்றும் திருச்சியிலும், கணிதம் நாமக்கல் மற்றும் விழுப்புரத்திலும், அறிவியல் திண்டுக்கல் மற்றும் சேலத்திலும், சமூக அறிவியல் பாடங்கள் திருவாரூர் மற்றும் மதுரையிலும் தயாரிக்கப்படும்.
இப்பணிக்காக கல்வி தொலைக்காட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பணிகள் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கும்.
”அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரமான கல்வியை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் அடிப்படையில் வீடியோ பாடங்கள் தயாரிக்கப்படும்,” என்று மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
”பாடங்களுக்கு வீடியோ உள்ளடக்கம் தயாரிக்கும் ஆசிரியர்களை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்கள் தேர்வு செய்வார்கள். ஆசிரியர்கள் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு பாடம் தொடர்பான வீடியோ பாடம், ஆடியோ கோப்பு, டெமோ வீடியோக்கள் மற்றும் ஏழு நிமிட அனிமேஷன் வீடியோக்களை தயார் செய்வார்கள். மே மாத இறுதிக்குள் இப்பணியை முடிக்க தமிழ்நாடு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்கள் வீடியோ பாடங்களை வகுப்புகளில் பயன்படுத்துவார்கள். வீடியோ பாடங்கள் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டும்," என்று அந்த அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“