/indian-express-tamil/media/media_files/2025/08/18/alagappa-univ-convocation-2025-08-18-20-23-53.jpeg)
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவில் 314 மாணவ - மாணவியருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை நேரிடையாக வழங்கினார்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக் கலையரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். க.ரவி அனைவரையும் வரவேற்று பல்கலைக்கழகத்தின் சாதனைகள் குறித்து உரையாற்றினார்.
தமிழக ஆளுநரும் அழகப்பா பல்கலைக்கழக வேந்தருமாகிய ஆர்.என். ரவி பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் மற்றும் இந்திய அரசின் விண்வெளித்துறை செயலாளருமாகிய முனைவர்.வி.நாரயணன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவில் உரையாற்றிய முனைவர்.வி.நாரயணன் கூறுகையில், ”சுதந்திரம் கிடைத்த காலத்தில் 97.5 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்குள் இருந்த நிலையில் இன்று இந்தியா அனைத்து துறைகளிலும் அபார முன்னேற்றம் கண்டுள்ளது. பசுமை புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. சுகாதார துறையில் உலக தர மருத்துவமனைகளும் மருத்துவர்களும் உருவாகி சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகளில் இருந்து 72 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. கல்வியறிவில் 12 சதவீதத்தில் இருந்து 79.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியா 1950-60 ஆண்டுகளில் மற்ற நாடுகளிடமிருந்து உணவுக்காக உதவி பெற்ற நிலையில் இன்று உணவு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடாக உயர்ந்துள்ளது. மின்சார வசதி அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைந்துள்ளது. மின் உற்பத்தி திறன் 1362 மெகா வாட்டிலிருந்து 403 ஜிகா வாட்டாக உயர்ந்துள்ளது. சுதந்திரம் பெற்ற போது ரூ 2.7 லட்சம் கோடி மட்டுமே இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்று ரூபாய் 135.13 லட்சம் கோடியாக உயர்ந்து உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. 2031 இல் மூன்றாவது வளரும் திறன் நமக்கு உண்டு. இந்தியன் ரயில்வே உலகில் மிகப்பெரியது. சாலைகள் 16 மடங்கு உயர்ந்து உலகின் இரண்டாவது பெரிய சாலை வலை அமைப்பாக உள்ளது,” என்று கூறினார்.
இப்பட்டமளிப்பு விழாவில், ஒருவருக்கு டி.எஸ்.சி (டாக்டரேட் ஆப் சயின்ஸ்) பட்டமும், 133 நபர்களுக்கு முனைவர் பி.எச்.டி பட்டமும் வழங்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்ற 2,035 மாணவர்களும், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 12,114 மாணவர்களும், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பயின்ற 23,158 மாணவர்களும், இணையவழி கல்வித்திட்டத்தின் வாயிலாக பயின்ற 553 மாணவர்களும், இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 5,169 மாணவர்களும், சோத்து ஆக மொத்தம் 43,163 மாணவ, மாணவியர்களும் பட்டங்கள் பெற்றனர்.
இதில் 314 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை நேரிடையாக ஆளுநர் வழங்கினார். இவர்களில் டி.எஸ்.சி - 1 மற்றும் பி.எச்.டி -133, பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 4 பேரும், முதுநிலை (பி.ஜி) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 48 பேரும், இளநிலை (யு.ஜி) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 12 பேரும், பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் முதுநிலை (பி.ஜி) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 25 பேரும், இளநிலை (யு.ஜி) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 30 பேரும், பல்கலைக்கழக இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் முதுநிலை (பி.ஜி) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 20 பேரும், இளநிலை (யு.ஜி) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 41 பேரும் ஆளுநரிடம் நேரில் பட்டம் பெற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.