Advertisment

9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? தேர்வு ரத்தால் பாதிப்புகள் என்ன?

ஏற்கெனவே, தேர்வு இல்லாமல் 9ம் வகுப்பு பாஸ், 10ம் வகுப்பும் பாஸ், இந்த சூழ்நிலையில், அடுத்த கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு எல்லாம் மறந்து போயிருக்கும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? தேர்வு ரத்தால் பாதிப்புகள் என்ன?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத நிலையில், இந்த கல்வியாண்டில் 9,10,11ம் வகுப்பு படிக்கிற அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? மாணவர்களின் கல்வி செயல்பாட்டில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisment

தமிழக சட்டப் பேரவையில் இன்று 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19ம் தேதி முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த கல்வியாண்டு முழுவதும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

ஏற்கெனவே கடந்த கல்வியாண்டின்போது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பொதுத் தேர்வு இல்லாமல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் 9,10,11 வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால்,

கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் திறக்கப்பட்டன. குறிப்பாக பொதுத் தேர்வெழுதும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திலும், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை மாணவர்களும் பள்ளிகளும் அதிகம் எதிர்பார்த்திருந்தன.

இது குறித்த இறுதி முடிவை தமிழக முதல்வர்தான் எடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் கடந்த வாரம் கூறியிருந்தார்.

இது தொடர்பான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். இதனால், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது மாணவர்களின் கல்வி கற்கும் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள், பெற்றொர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது மாணவர்களின் கல்வி கற்கும் செயல்பாட்டில் பாதிப்ப்பை ஏற்படுத்துமா? என்பது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறனிடம் பேசினோம்.

இளமாறன் ஐ.இ தமிழிடம் கூறியதாவது: “நிச்சயமாக பாதிப்பு இருக்கும். முதலில் சுவர் இருதால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உளநலம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதனால், கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கத்தில் இருந்தது. அந்த முடக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவருவதற்காக நாங்கள் பல முறை செய்தோம். நேரடி பயிற்சி மட்டும்தான் மாணவர்களை செம்மைப்படுத்த முடியும் என்று நாங்கள் சொல்லியிருந்தோம். அதன்படி, ஜனவரியில் பள்ளிகளைத் திறந்தார்கள். இப்போது அந்த நேரடி பயிற்சி கொஞ்சம் இருந்தாலும், திடீரென தேர்வு அறிவித்தால் மாணவர்கள் மத்தியில் ஒரு குழப்பம் மன உளைச்சல் இருந்துகொண்டே இருந்தது. முதல்வரின் அறிவிப்பு வரவேற்புக்கு உரியதுதான். இந்த கொரோனா தொற்று சூழலில் நாம் இதை வரவேற்றுதான் ஆக வேண்டும்.

மாணவர்கள் இதே நிலையில் தேர்வு எழுதினால், எத்தனை பேர் தேர்ச்சியடைவார்கள் என்று சொல்ல முடியாது. அது ஒரு பெரிய பிரச்னையாகிவிடும். அதே நேரத்தில் இந்த ஓராண்டு கல்வி முடக்கத்தால் அடுத்த ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாவிட்டால் அந்த மாணவனின் கல்வி தொடர்ச்சியில்லாமல் போய்விடும். ஏனென்றால், தொடர் பயிற்சி போய்விடும்.

ஒரு மாணவன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாவிட்டால், அடுத்து 11ம் வகுப்பு படிப்பதற்கு மறு தேர்வு எழுத அவன் முயற்சிக்கவே மாட்டான். பெரும்பாலும் மாணவர்கள் கல்வியில் இடைநிற்றல் (Drop Out) இப்படிதான் ஆகிவிடும். மறு தேர்வு எழுதி மீண்டும் படிப்பைத் தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம்தான் இருக்கும். அந்த சூழ்நிலையில், இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதுதான்.

இருந்தாலும், அடுத்த பேட்ச் வரும்போது, கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியது இருக்கும். ஆசிரியர்களுக்கு இது ஒரு சவால்.

ஏற்கெனவே, தேர்வு இல்லாமல் 9ம் வகுப்பு பாஸ், 10ம் வகுப்பும் பாஸ், இந்த சூழ்நிலையில், அடுத்த கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு எல்லாம் மறந்து போயிருக்கும். இன்னும் தொடக்கப்பள்ளி அளவில் எல்லாம் குழந்தைகளுக்கு எழுத்தறிவே மறந்து போயிருக்கும். அதனால், மாணவர்களுக்கு முதலில் எழுத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு படிக்கிற மனநிலையை கொண்டுவர வேண்டும்.

பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பிரிவு மாணவர்கள்தான் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் முழுவதும் தினக்கூலிகளாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாத வகையில் உள்ள தமிழக அரசின் இந்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.” என்று கூறினார்.

கேள்வி: தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? தற்போதைய சூழ்நிலையில் இது மாணவர்களின் கல்வி செயல்பாட்டில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

இளமாறன்: தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்களா என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. ஏனென்றால், ஒரு மாணவன் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வந்த பிறகு அதே பாடத்தை தொடர்ந்து படிக்க ஆர்வம் வராது. அடுத்த வகுப்பு படிக்க வேண்டிய புத்தகத்தை எடுத்து வைத்துக்கொள்வார்கள். ஆசிரியர்கள் இனிமேல் மாணவர்களுக்கு போன் செய்து வாருங்கள் என்று அழைத்தாலும் ஒரு 10 சதவீதம் மாணவர்கள்தன் வருவார்கள்.

கேள்வி: இந்த அறிவிப்பை அரசு இன்னும் தாமதமாக அறிவித்திருக்கலாம் என்று கருதுகிறீர்களா?

இளமாறன்: “இந்த அறிவிப்பை தாமதமாக அறிவிப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஏனென்றால், விரைவில் தேர்தல் அறிவிக்க உள்ளனர். அதற்குப் பிறகு, காபந்து அரசாக மாறிவிடும். அதற்குப் பிறகு, இது போன்ற கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது. அதனால்தான், இதுவரை தேர்வு தேதி அறிவிக்கப்படாமலேயே இருந்தது. 12ம் வகுப்பு தேர்வு தேதி அறிவித்த பிறகு, 10ம் வகுப்புக்கு தேர்வு தேதி அறிவிக்காமல் இருந்தார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment