நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பொது முடக்கத்துக்குப் பிறகு, தமிழக அரசு, நவம்பர் 16ம் தேதி 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. பள்ளிகள் திறப்பதால் மாணவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 9-ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்களுடன் ஆலோசனை நடத்தி கருத்து கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டங்களில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எழுத்துப்பூர்வமாக தங்களது கருத்துகளை அனுப்பலாம். அந்தந்த பள்ளிகள் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில், அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும்.” என்று பள்ளி கல்விச் செயலாளர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடந்து, இன்று (நவம்பர் 4) அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டங்கள் அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். நவம்பர் 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ள இந்த கூட்டங்களுக்கு அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்குவார்கள்.
பள்ளிகள் திறப்பது தொடர்பாக, மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துகளைத் தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி முதல் இந்த வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் சில கருத்துக்கள் கேட்கபட உள்ளன. இருப்பினும், கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தலைவர்கள், கொரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி, நவம்பர் 16 பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.