பிரசிடென்சி கல்லூரி 2024-25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 1.3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிக விண்ணப்பங்கள் பெற்ற கல்லூரியாக பிரசிடென்சி கல்லூரி உள்ளது.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று பிரசிடென்சி கல்லூரி. இந்தக் கல்லூரியில் இளநிலை பிரிவில் மொத்தம் 1140 இடங்கள் உள்ளன. இந்தக் கல்லூரியில் பி.ஏ (BA) பொருளாதாரம், பி.ஏ வரலாறு மற்றும் பி.எஸ்.சி (B.Sc) வேதியியல் ஆகியவை பிரசிடென்சி மிகவும் விருப்பமான படிப்புகளாக உள்ளன. மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் எத்திராஜ் பெண்களுக்கான கல்லூரி உள்ளிட்ட பிற நிறுவனங்களில் பிகாம் மற்றும் கணினி தொடர்பான படிப்புகளுக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என TOI செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், பிரசிடென்சி கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 1.3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. 1.34 லட்சம் விண்ணப்பங்களில், 53,171 பெண்கள் மற்றும் 43 திருநங்கைகள். கடந்த ஆண்டு, பிரசிடென்சி கல்லூரிக்கு 1,20,304 விண்ணப்பங்கள் வந்தன.
"கல்லூரியில் ஒரு இடத்திற்கு ஏறத்தாழ 120 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். இந்த எண்ணிக்கையில் ஒரே மாணவர் பல பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்ததும் அடங்கும்" என்று பிரசிடென்சி கல்லூரியின் முதல்வர் ராமன் கூறினார். ஒரு மாணவர் அரசு கல்லூரியில் ஐந்து படிப்புகள் வரை விண்ணப்பிக்கலாம்.
“இந்த ஆண்டு மாணவிகளின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 10,000 அதிகரித்துள்ளது. பெண்கள் மத்தியில் பிரபலமான படிப்பு பி.எஸ்.சி வேதியியல் மற்றும் பி.ஏ வரலாறு. விண்ணப்பித்தவர்களில் 80% க்கும் அதிகமானோர் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள்,” என்று முதல்வர் ராமன் கூறினார்.
48 இடங்கள் உள்ள பி.எஸ்.சி கணிதப் பாடத்திற்கு 5,098 விண்ணப்பித்துள்ளனர. இது கடந்த ஆண்டை 450 அதிகமாகும். செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான பி.காம் மற்றும் பி.சி.ஏ படிப்புகளுக்கு 1,010 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த கல்வியாண்டில் ஒரு ஆடிட்டோரியம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விடுதி மற்றும் கேன்டீன் ஆகியவற்றையும் கல்லூரியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சிறப்புப் பிரிவு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தொடங்கியது.
நந்தனத்தில் உள்ள ஆண்களுக்கான அரசு கலைக் கல்லூரியில் 1,132 இடங்களுக்கு 19,727 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் பி.எஸ்.சி கணினி அறிவியலுக்கு 5,106 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பி.ஏ தமிழ் மற்றும் பி.பி.ஏ படிப்புகளுக்கும் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. கல்லூரியில் இந்த ஆண்டு 2000க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.
குயின் மேரிஸ் கல்லூரி இந்த ஆண்டு பி.காம் படிப்புக்கு அதிக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள பல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 30-ம் தேதி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“