அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பி.எஸ்.சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று (ஜூலை 30) தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி நர்சிங், பி.பார்ம், பிசியோதெரபிஸ்ட், ரேடியாலஜி, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,256 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 20,026 இடங்களும் உள்ளன.
இந்த நிலையில், அரசு கல்லூரிகளில் உள்ள துணை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களுக்கு சிறப்பு பிரிவு மற்றும் பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் ஜூலை 30-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக அரசு கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கான சீட் மேட்ரிக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 200 கட் ஆஃப் முதல் 165 கட் ஆஃப் வரை உள்ளவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அதாவது பொது தரவரிசையில் 20207 இடத்தில் உள்ளவர்கள் வரை அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். கலந்தாய்வில் கலந்துக் கொள்பவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களைத் தேர்வு செய்யலாம்.
இவர்களுக்கான கலந்தாய்வு முடிவுகள் மற்றும் தற்காலிக ஒதுக்கீடு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்படும். சீட் ஒதுக்கீடு பெற்றவர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சென்று சேர்க்கை பெற வேண்டும்.