புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த தனது நிலைப்பாட்டு அறிக்கையை தமிழக அரசு வெளியிடவுள்ளது.
முன்னதாக, தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க உயர் கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மும்மொழித் திட்டம் தொடர்பான தனது எதிர் நிலைபாட்டை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், " புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும்" தெரிவித்தார்.
இதற்கிடையே, கல்லூரிகளுக்கான இணைப்பு அனுமதி 15 வருடங்களில் காலாவதி ஆகும் என்ற புதிய தேசிய கல்வி கொள்கையின் அறிவிப்பில் தமிழக அரசு முரண்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த முடிவு, இணைப்பு கல்லூரிகளின் தற்போதைய செயல் திட்டத்தை கடுமையாக பாதிக்கும் என்று தமிழக அரசு கருதுகிறது.
ஒவ்வொரு கல்லூரியையும் தன்னாட்சியுடைய பட்டங்களை வழங்கும் கல்லூரியாகவோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவோ மேம்படுத்தப்படும் என்று புதிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை முன்னெடுக்கும் இளநிலைப் பட்டப் படிப்பை தமிழக உயர்க் கல்வித்துறை வரவேற்கிறது. நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல் ஆகியவற்றுடன், விரிவான அடிப்படையிலான இளநிலைப் பட்டப் படிப்பை கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த, இளநிலை பட்டக் கல்வி , 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம். இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும். உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ , 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும், 3,5,8-ஆம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் , உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுதுவார்கள் என்றும் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு பொது மக்களின் எதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil