தமிழக அரசுப் பள்ளிகளில் 2025-26 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டில், இதுவரை 15 வேலை நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 15 வேலை நாட்களில் அனைத்து வகுப்புகளிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கல்வித் துறை வெளியிட்ட தரவுகளின்படி, 1 ஆம் வகுப்புக்கு 91699 மாணவர்களும், எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை, மொத்தம் 9,980 மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கைப் பெற்றுள்ளனர். இதில், 1 ஆம் வகுப்பைப் பொறுத்தவரை 72,646 மாணவர்கள் தமிழ் வழியிலும், 19,053 மாணவர்கள் ஆங்கில வழியிலும் புதிதாக சேர்க்கைப் பெற்றுள்ளனர்.
தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தல்களின்படி, புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் கல்வி மேலாண்மை தகவல் அமைப்புகள் (EMIS) போர்ட்டலில் பதிவு செய்யப்படுகிறது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் அரசு நடத்தும் மாணவர்களில் அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்கள் சேருவதை உறுதி செய்வதற்காக, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துமாறு ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு நடத்தும் பள்ளிகளில் சேர ஊக்குவிக்கும் வகையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல்வர் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், புதுமை பெண், தமிழ்ப் புதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற முயற்சிகள் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.