தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் 6-ம் வகுப்பு முதலான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளையும், தொடக்கப்பள்ளிகள் 14-ம் தேதியும் திறக்க உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணியிடங்கள் ஒதுக்கப்படாதது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருக்கின்றது.
அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் இதுவரை தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணியிடம் ஒதுக்கப்படவில்லை என்பதால் நாளை காலை எந்தப் பள்ளிக்கு எந்த நேரத்திற்கு செல்வது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. மெத்தனமாக செயல்பட்டு வரும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்திலிருந்தும் எந்தத் தகவலும் இல்லாததால் என்ன செய்வது விழித்துக் கொண்டிருக்கின்றனர் என்றத் தகவல் வெளிவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு ஒரே கவுன்சலிங்; தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை
இதுகுறித்து ஆசிரியர் வட்டாரத்தில் விசாரித்தபோது; திருச்சி மாவட்டத்தில் அரசு உதவிப்பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. அதேபோன்று, சில அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உபரி ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலியிடங்கள் உள்ள பள்ளிகளில் மாற்றுப்பணிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த கல்வியாண்டில் மாற்றுப் பணியில் இருந்த ஆசிரியர்கள், கடைசி வேலை நாளான கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி அவரவர் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டனர்.
இதனால் ஜூன் 01-ம் தேதியே இக்கல்வியாண்டுக்கு உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணியிடங்கள் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், அதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. நாளை பள்ளிகள் திறக்கவிருக்கும் நிலையில், நேற்று முன்பு அதற்கான படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து, எவ்வளவு உபரி ஆசிரியர்கள் என கணக்கிட்டு, ஆசிரியர்களின் சீனியாரிட்டிப்படி அவர்களுக்கு பணியிடம் ஒதுக்க குறைந்தளவாக சுமார் 10 நாட்களாகும்.
திருச்சி மாவட்டத்தில் பீமநகர் மாநகராட்சி பள்ளியில் 15 ஆசிரியர்களும், எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளியில் 10 நபர்களும், தாராநல்லூர் பள்ளியில் 6 நபர்களும் மாநகராட்சி லிமிட்டில் தேவைப்படுகின்றனர். அதேபோல், மணப்பாறை, மருங்காபுரி, முசிறி, துறையூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் உபரி ஆசிரியர்களின் தேவை அவசியமாகியிருக்கின்றது.
இந்தநிலையில், நாளை பள்ளிகள் திறக்கப்பட்டதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் கொடுக்க வேண்டிய பணிகளின் சுமை அதிகரிக்கும். அதேபோல், புதிய மாணவர்களின் சேர்க்கையும் நடைபெறும். இதனால் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களின் தேவையும் அதிகரிக்கும் நிலை எழுந்துள்ளது.
ஏற்கனவே பள்ளி திறப்பு 2 வாரங்கள் தாமதமாகியிருக்கும் நிலையில், உபரி ஆசிரியர்கள் நியமனமும் தாமதமாகும் பட்சத்தில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியும் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் பள்ளிகளில் திறப்புக்கு முன்னதாகவே மாற்றுப்பணியில் உபரி ஆசிரியர்களை நியமித்திருந்தால், கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களை தவிர்த்திருக்கலாம்.
மேலும், கடைசி நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் எதோ ஒரு மூலையில் இருந்து அதாவது காட்டூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தாண்டியுள்ள புறத்தாக்குடி, விராலிமலை, மணப்பாறையை அடுத்துள்ள கோவில்பட்டி என வெகுதூரத்திற்கு சர்ப்ளஸ் எனப்படும் உபரி ஆசிரியர்களை பணியமர்த்தும்போது ஆசிரியர்கள் பெருத்த வேதனைகளையும், சோதனைகளையும் சந்திக்கவேண்டிய அவல நிலை தொடர்கிறது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே முக்கியமான உபரி ஆசிரியர்கள் எந்தப் பள்ளிக்கு தாங்கள் நியமனப்படுத்தப் பட்டிருக்கின்றோம் என்ற தகவல் தெரியாததால் எங்கு செல்வது என்ற குழப்பத்தில் பறிதவித்து வருகின்றனர். கடைசி நேரத்தில் பணி நியமனம் தாமதமாகியிருப்பது பல்வேறு வேலை பளுக்களை கூடுதலாக்கும் நிலையில், விரைவாக உபரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை வெளியிட்டு பணியமர்த்தி மனச்சுமையை குறைக்க வேண்டும் என்றார்.
மேலும், உபரி ஆசிரியர்களின் பணி நியமன தாமதம் என்பது திருச்சி மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தொடர்கிறது என்றார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil