திருச்சியில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலும், பள்ளி கல்வித்துறையின் பாரபட்சத்தாலும் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஒரே கட்டடத்தில் 2 பள்ளிகள் இயங்கும் பரிதாபநிலை தொடர்வது அப்பள்ளியில் படிப்போரையும், பணியாற்றுவோரையும் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
திருச்சி மாநகரில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே கட்டிடத்தில் இரண்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: குளோபல் ஸ்டூடண்ட் பரிசு 2023; திருவண்ணாமலை மாணவி உட்பட டாப் 50 இடங்களில் 5 இந்தியர்கள்
திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் உள்ள மதுரம் மைதானத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 68 ஆண்டுகளாக 7 வகுப்பறைகளுடன் செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை என 130-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கீழப்புலிவார்டு சாலையின் அருகிலுள்ள ஜின்னா தெருவில் மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி கட்டடத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பள்ளி, மதுரம் மைதானத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இதனால் அங்கிருந்த மதுரம் மைதானம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடத்தில் உள்ள 7 வகுப்பறைகளில், 5 வகுப்பறைகள் தொடக்கப்பள்ளிக்கும், 2 வகுப்பறைகள் ஜின்னா தெரு உருது பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன்பிறகு ஜின்னா தெரு பள்ளிக்கு தனி இடம் ஒதுக்கி கட்டடம் கட்டப்படாத நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக ஒரே கட்டடத்தில் இரு பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிக்குள்ளாகி வருவதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவருடன் நாம் பேசுகையில் தெரிவித்ததாவது; பள்ளிக்கல்வித்துறையில் பல இடங்களில் வட்டார தொடக்கக்கல்வி அலுவலகங்கள், மாவட்டக்கல்வி அலுவலகங்கள், அரசுப்பள்ளி வளாகங்களில் செயல்படுவதை பார்த்திருப்பீர்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் 2 பள்ளிகள் அதுவும் கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதை பர்த்திருக்கின்றீர்களா? இங்கே அப்படித்தான் செயல்பட்டு வருகின்றன.
இந்த வகுப்பறை பங்கீட்டால் இரு பள்ளி மாணவர்களுக்கும் உரிய இடவசதி இல்லாமல் நெருக்கடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஜின்னா தெரு பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 வகுப்பறைகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஒரே கட்டடத்தில் 2 பள்ளிகள் என்ற நிலையில் கூடுதல் வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களின் சேர்க்கை குறைந்து இப்போது 27 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கென தனி தலைமை ஆசிரியர் அறையும் இல்லை. அதேபோன்று இரு பள்ளிகளிலும், வகுப்பறைகளில் சில வகுப்புகள் இணைந்து நடத்தப்படுவதால் ஆசிரியர்களும் சத்தமாக பாடம் நடத்த முடியாததால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனில் குறைபாடுகள் வெகுவாக எழுந்துள்ளது.
இந்த இரு பள்ளிக் கட்டடத்திற்கும் ஒரே கழிவறை மட்டுமே இருப்பதால் அதனையே இருபள்ளிகளின் மாணவ, மாணவிகள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
அதே சமயத்தில் ஒரே கட்டத்தில் உள்ள இரு பள்ளிகளுக்கும் தனித்தனியாக இரு உலை வைத்து சத்துணவு சமைக்கப்படுகின்றது. திங்கள்கிழமை காலை வழிபாட்டின்போது, அருகருகிலேயே 2 தேசியக்கொடிகள் ஏற்றப்படும். இப்படி கடந்த 9 ஆண்டுகளாக ஏகப்பட்ட முரண்பாடுகள், பிரச்சனைகளுடன் இந்த இரு பள்ளிகளும் செயல்பட்டு வருவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் மன அழுத்தத்தாலும், பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாலும் பெரும் அவதியுற்று வருகின்றனர் என்றார். இதுகுறித்து அரசுக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், அமைச்சருக்கும் பலமுறை கோரிக்கை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லைங்க. அமைச்சர் நினைத்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வினை எளிதில் அடைய முடியும் என்றார் வேதனையோடு.
இதுகுறித்து அங்கு படிக்கும் பள்ளி மாணவரின் பெற்றோர் ஒருவர் கூறுகையில், எங்களின் வறுமையால் நாங்கள் அரசு பள்ளிக்கு கொண்டு வந்து எங்களின் பிள்ளைகளை சேர்த்திருக்கின்றோம். இங்கு ஒரே கட்டிடம்தான், 2 பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு சரியான பதிவேடுகள் இல்லை. எங்க பசங்கள கொண்டு வந்து விடும்போது அவர்கள் சில நேரத்தில் குழப்பத்தால் அடுத்த வகுப்பறைக்கு சென்று விடுவதும் உண்டு.
பள்ளி கட்டடத்தில் வகுப்பறைகளில் மாணவர்களுக்கான இடவசதியும் குறைவாக இருக்கின்றது. கடும் வெயில் காலங்களிலும், மழைக்காலங்களிலும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். கழிவறை என்பது ஒன்னுதான் இருக்கு. பெண் பிள்ளைகள் மற்றும் பசங்களும் அவசரத்திற்கு ஒதுங்குவதற்கு கடும் சிரமத்தை எதிர்கொள்ளுகின்றனர். இதை எப்போ சரி செய்வாங்கன்னுதான் தெரியல.
சத்துணவு போடுறாங்க, பசங்க தட்டை ஏந்திக்கிட்டு எங்க வாங்குறதுன்னே தெரியாம அலைமோதுவாங்க, இப்படி நிறைய பிரச்சனை இருக்குங்க என்றார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை என்பது வேதனைக்குரியது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், அமைச்சர் மனசு வைத்து ஜின்னா தெரு உருது பள்ளிக்குக் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.