தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் 1265 பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் காலி பணியிடங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பணியிடங்கள் விரைவில் நிரப்பபடவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் மொத்தம் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களில் தற்போது 1265 பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் 342 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களும், சென்னை பல்கலைக்கழகத்தில் 305 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களும் உள்ளன. இதனால் கற்பித்தல் பணிகளில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: முதுகலை மருத்துவ படிப்பு; 50% எம்.பி.பி.எஸ் டாப் ரேங்க் மாணவர்கள் இந்த பாடப் பிரிவை மட்டுமே தேர்வு பண்றாங்க!
இதேபோல் இந்த 13 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் 2,345 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால் நிர்வாக செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களை நிரப்புவதற்கு கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் பகுதிநேர விரிவுரையாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையின் காரணமாகவே காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நிதி சுமை காரணமாகவும் காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதாக பல்கலைக்கழகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தச் சிக்கல்களை கலைந்து விரைவில் காலியிடங்கள் நிரப்பப்படும் என கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil