பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகளில் எந்தெந்த படிப்புகள் அரசு வேலை வாய்ப்பு நோக்கில் இணையானவை என உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு வேலை வாய்ப்புக்கு பெரும்பாலான படிப்புகள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்குள் இடம்பெறும். இருப்பினும் சில பல்கலைக்கழகங்கள் வழங்கும் சிறப்பு படிப்புகள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை பூர்த்தி செய்யாது. இதனால் அந்த படிப்புகளை படித்த மாணவர்கள் அரசு வேலை வாய்ப்பு பெறுவதில் சிரமங்கள் எதிர்கொள்வர். இதனை நிவர்த்தி செய்யும்பொருட்டு, குறிப்பிட்ட படிப்புகளை தொடர்புடைய படிப்புகளுக்கு இணையானதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் தற்போது உயர்கல்வி துறை சில படிப்புகளை இணை படிப்புகளாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக உயர்கல்வி துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.பி.இ (பேச்சிலர் ஆப் பிசினஸ் எகனாமிக்ஸ்) படிப்பு வேலைவாய்ப்பு நோக்கில் பி.ஏ (பொருளாதாரம்) படிப்புக்கு இணையானது. அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் (அக்கவுன்ட்டிங் & ஃபைனான்ஸ்) படிப்பு, பி.காம் (பொது) பட்டப் படிப்புக்கு சமமானது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சுற்றுலா மேலாண்மை முதுகலை டிப்ளமோ படிப்பு, சுற்றுலா மேலாண்மை டிப்ளமோ படிப்புக்கு இணையானது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.பி.ஏ ஹோட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பானது தமிழக அரசின் சுற்றுலா அலுவலர் பதவிக்கான கல்வி தகுதிகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா பாடத்துடன் கூடிய முதுகலை படிப்புக்கு சமமாக கருதப்படும். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.