தமிழக அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்ப வரும் 21 ஆம் தேதி நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த சில மாதங்களாக சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றது. இதில் சேர்க்கைப் பெற்றவர்களுக்கு தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: 13 பல்கலைக் கழகங்களில் 1265 ஆசிரியர் காலி பணியிடங்கள்; நியமனம் எப்போது?
இந்தநிலையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஆகஸ்ட் 21 ஆம் தேதி நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் 2023-24-ஆம் ஆண்டுக்கான இளநிலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடைபெற உள்ளது. மாணாக்கர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் "TNGASA2023-UG VACANCY"- என்ற தொகுப்பில் காணலாம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil