தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4,000 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்கக்கூடிய தேடுதல் குழுவுக்கு அரசின் விதிப்படி 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யு.ஜி.சி பிரதிநிதியுடன் கூடிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசை ஆளுநர் வலியுறுத்தி உள்ளார்.
உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர். நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும்தான் தேர்வுக் குழுவை நியமித்தோம். மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன? எதில் தலையிட வேண்டும்? எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத கவர்னர் அதை கண்டித்திருப்பதும், யு.ஜி.சி தேர்வுக் செய்யக்கூடிய உறுப்பினரை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 4-வது உறுப்பினரை எங்களின் தலையில் சுமக்க வைப்பதும் கவர்னர் பொறுப்புக்கு அழகல்ல.
உயர்கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதை சீர்குலைக்க வேண்டும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடையூறுகளை ஆளுநர் செய்து வருகிறார். இதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், சட்டரீதியாக அவரது செயல்பாடுகளை வரையறுக்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்படும். அந்த நிலை ஏற்படாமல் இருப்பதுதான் அவரது பதவிக்கு அழகாகும்.
தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் 2,000 கவுரவ விரிவுரையாளர்களை தமிழக முதல்வர் நியமித்துள்ளார். மேலும் 750 கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4,000 நிரந்தரப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“