தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, இந்தாண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுதர இலக்கு நிர்ணயித்துள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் சி வி கணேசன் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் தொழில்துறையை புதுப்பிக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், னியார் துறையில் பொருத்தமான வேலைவாய்ப்பைக் கண்டறிவதற்காக வாய்ப்புகளை தொழிலாளர் துறை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் பேசிய சிவி கணேசன், ஆகஸ்ட் 15க்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் இளைஞர்கள் தனியார் துறையில் வேலை பெறுவதை இலக்காக கொண்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு லட்சம் இளைஞர்களுக்குக் குறையாமல் வேலைவாய்ப்பு பெற்று தருவதை நோக்கமாக வைத்துள்ளோம்.
இதுவரை, மொத்தம் 56 வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்தோம். இதில் ராயல் என்ஃபீல்டு, எம்ஆர்எஃப், ஃபாக்ஸ்கான் மற்றும் ஹூண்டாய் உட்பட 500 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த முகாம்களில், 3.70 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். அதில், 69,010 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
செங்கல்பட்டில் கடந்த முறை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 8,752 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார். தனியார் நிறுவனங்களைத் தவிர, எஸ்பிஐ போன்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் முகாமில் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த முகவர்களை நியமனம் செய்தனர். வேலை வாய்ப்புகள் ரூ.10,000 முதல் ரூ. 31,000 வரையிலான சம்பள பேக்கேஜூடன் மற்ற சலுகைகளும் இடம்பெற்றிருந்தன.
அடுத்த கட்டமாக திண்டுக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
துறை அதிகாரி கூற்றுப்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் வேலைக்குத் தயாராகுவதற்கு ஏதுவாக தொழில் நிறுவனங்களுடன் ஏஜென்சி ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil