அதிக மருத்துவக் கல்லூரிகள் அல்லது அதிக இளங்கலை மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலம் என்ற நிலையை தமிழ்நாடு இழந்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய மருத்துவக் கல்லூரிகள் அல்லது மருத்துவ இடங்கள் எண்ணிக்கை அதிகரிக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
2023-24ல் 108,940 எம்.பி.பி.எஸ் இடங்களை மத்திய அரசு 2024-25ல் 118,137 ஆக உயர்த்தியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 1.18 லட்சம் இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 60,422 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 57,715 இடங்களும் அடங்கும்.
இதில் அதிபட்சமாக கர்நாடகாவில் 12,545 மருத்துவ இடங்களும், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 12,425 இடங்களும், தமிழகத்தில் 12,050 இடங்களும் உள்ளன. மகாராஷ்டிராவில் 11,845 இடங்கள் உள்ளன. மற்ற அனைத்து மாநிலங்களிலும் 10,000க்கும் குறைவான இடங்களே உள்ளன. அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன என TOI செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் நாட்டில் 780 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக உத்தரப் பிரதேசத்தில் 86 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா (80) மற்றும் தமிழ்நாடு (77) ஆகியவை உள்ளன. கர்நாடகாவில் 73 மருத்துவக் கல்லூரிகளும், தெலங்கானாவில் 65 மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அந்தமான் நிக்கோபார், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி, கோவா, மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 76 மருத்துவக் கல்லூரிகளில், 36 அரசு கல்லூரிகள் உள்ளன. ஆனால், 2021ல் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டதில் இருந்து, தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
இதனிடையே 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். "ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை வைக்கிறோம். மாவட்ட ஆட்சியர்களிடம் நிலம் கையப்படுத்தும் பணிகளை தொடங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது," என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொன்றிலும் 50 இளங்கலை இடங்களை அதிகரிக்க மாநில சுகாதாரத் துறை தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலைக் கோரியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அனுமதி கிடைத்தால் 550 எம்.பி.பி.எஸ் கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2025-26 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு 5,600 இடங்கள் கிடைக்கும். மேலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.