/indian-express-tamil/media/media_files/2025/08/01/mbbs-students-2025-08-01-18-42-48.jpg)
தமிழகத்தில் இரண்டாம் சுற்று மருத்துவ கலந்தாய்வில் 1750 இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று நிறைவடைந்து 7513 பேருக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து இரண்டாம் சுற்று தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் தாமதமாகி வருகிறது. இந்தநிலையில், இரண்டாம் சுற்றுக்கு கூடுதல் இடங்கள் வர வாய்ப்புள்ளதாக மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோவின்படி, தமிழகத்தில் இரண்டாம் சுற்று மருத்துவ கலந்தாய்வு தாமதமாகி வருகிறது. இந்திய அளவில் சுமார் 8000 மருத்துவ இடங்களும் தமிழகத்தில் சுமார் 200 மருத்துவ இடங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது இதற்கு காரணமாக இருக்கிறது. அதேநேரம் தமிழகத்தில் இரண்டாம் சுற்று கவுன்சலிங்கிற்கு 1750 இடங்களுக்கும் அதிகமான இடங்கள் வர வாய்ப்புள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த இடங்கள் அதிகரிக்க உள்ளன.
தமிழகத்தில் உள்ள 26 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சுமார் 10 நிறுவனங்கள் தங்கள் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்கக் கோரி தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் முழுமையான ஆய்வுக்குப் பிறகு அனுமதி அளிக்கும்.
தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்தால் சுமார் 1750 இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசு கல்லூரிகளில் இல்லை என்றாலும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டுக்கான இடங்களும் அதிகரிக்கும். எனவே முதல் சுற்றில் சீட் கிடைக்காதவர்கள், இந்த இடங்கள் அதிகரித்தால் இரண்டாம் சுற்றில் சீட் எதிர்ப்பார்க்கலாம்.
மேலும் கட் ஆஃப் சற்று குறையலாம். ஆனால் ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணில் அதிகமான மாணவர்கள் இருப்பதால் பெரிய அளவில் குறையாது. அதேநேரம் தரவரிசையில் பெரிய மாற்றம் இருக்கும்.
மறுபுறம், முதலாண்டு வகுப்புகள் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.