/indian-express-tamil/media/media_files/2025/07/09/tnea-engineering-counselling-2025-07-09-21-06-39.jpg)
தமிழகத்தில் இரண்டாம் சுற்று மருத்துவ கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன? இரண்டாம் சுற்றுக்கு பதிவு செய்வது எப்படி என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று நிறைவடைந்து 7513 பேருக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து இரண்டாம் சுற்று கவுன்சலிங் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் இரண்டாம் சுற்று மருத்துவ கலந்தாய்வுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 159 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதில் சென்னை மருத்துவக் கல்லூரியில் அதிகபட்சமாக 76 இடங்கள் காலியாக உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை 28 கல்லூரிகளில் 159 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியில் 2 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 249 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. மேனேஜ்மெண்ட் கோட்டாவில் 616 இடங்கள் என மொத்தம் 865 இடங்கள் உள்ளன. அதேநேரம் தனியார் பல்கலைக்கழகங்களில் 223 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக 1249 எம்.பி.பி.எஸ் காலியாக உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 477 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.
பி.டி.எஸ் படிப்பில் 73 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ளன. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 954 இடங்களும், தனியார் பல்கலைக்கழகத்தில் 4 இடங்களும் உள்ளன.
7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு பிரிவில் பல் மருத்துவத்தில் மட்டும் இடங்கள் உள்ளன. அரசு கல்லூரிகளில் 3 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 16 இடங்களும் உள்ளன.
கவுன்சலிங்கிற்கு பதிவு செய்வது எப்படி?
1). முதலில் தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://tnmedicalselection.net/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
2). இந்தப் பக்கத்தில் யூ.ஜி கோர்சஸ் என்ற டாப்-ஐ கிளிக், எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
3). புதிதாக தோன்றும் பக்கத்தில் CLICK HERE FOR ONLINE COUNSELLING OF MBBS / BDS COURSE (GOVERNMENT / MANAGEMENT (Including Minority) / NRI QUOTA) SESSION 2025 - 2026 Session என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
4). இப்போது உங்கள் உள்நுழைவுச் சான்றுகளான விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) மற்றும் கேட்சா குறியீடு கொடுத்து உள்நுழைய வேண்டும். சில நேரம் கடவுச்சொல் தவறு என வரும். அப்போது கடவுச்சொல்லை மீண்டும் உருவாக்கிக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
5). இப்போது தோன்றும் பக்கத்தில் “கலந்தாய்வில் பங்கேற்க இங்கே கிளிக் செய்யவும்” என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
6) அதில் உறுதிப்படுத்தலை கொடுத்து, பதிவை முடிக்க வேண்டும்.
7). அடுத்ததாக மேனேஜ்மெண்ட் கோட்டாவில் பங்கேற்க விருப்பமா என்ற விருப்பத்திற்கு உங்கள் விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும். இதனை தேர்வு செய்யும் பட்சத்தில் டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும். விருப்பம் இல்லை என்றால் தேர்வு செய்வதை தவிர்க்கலாம்.
8). இதனையடுத்து தற்போது பதிவு செயல்முறை முடிந்தது. 19 ஆம் தேதி சாய்ஸ் ஃபில்லிங் தொடங்கும். அதில் உங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us