தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான விடுதி கட்டணம், உணவுக் கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்டவற்றுக்கான கட்டண விவரத்தை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளை படிக்க, அரசுக் கல்லூரிகளைத் தவிர 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 4 தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண நிர்ணயக் குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்வி கட்டணங்களை நிர்ணயம் செய்கிறது. அதன்படி 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணங்களை கட்டண நிர்ணயக் குழு உயர்த்தி அறிவித்துள்ளது.
தற்போது, நடப்பு கல்வியாண்டிற்கு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடந்து முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவு கலந்தாய்வின் முதல் சுற்று ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு விடுதி, உணவு, போக்குவரத்து மற்றும் இதர வகை கட்டணம் என்று 4 பிரிவுகளின் கீழ் புதிய கட்டணங்களை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. விடுதி கட்டணமாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரமும் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவுக் கட்டணமாக, குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் வரையும், போக்குவரத்து கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல், அதிகபட்சமாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல, இதர கட்டணம் என்ற வகையில், ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில், பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம் மட்டும் சற்று குறைவாக உள்ளது.
இந்நிலையில், அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும், புதிய கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.