தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், எவ்வளவு விண்ணப்பங்கள் வந்துள்ளன? தரவரிசைப் பட்டியல் எப்போது வெளியாகும்? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 11,350 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இந்தாண்டு ஜூன் 6 தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த ஆண்டு மொத்தம் 72,943 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 65% விண்ணப்பங்கள் கூடுதலாக உள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 5200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். சுயநிதி கல்லூரிகளில் 3450 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 550 எம்.பி.பி.எஸ் இடங்களும் உள்ளன. மொத்தம் 9200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 496 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டு வழங்கப்படும்.
பி.டி.எஸ் இடங்களைப் பொறுத்தவரை அரசு மருத்துவ கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1900 இடங்களும் உள்ளன. அதில் 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல், மத்திய அரசிடமிருந்து நீட் தேர்வு மதிப்பெண்களைப் பெற்று, சரிபார்க்கப்பட்டு, அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.