தேசிய சுகாதாரப் பணிகள் இயக்குநரகம், மருத்துவ கவுன்சலிங்கிற்கான அட்டவணை மற்றும் தகவல் அறிக்கையை வெளியிடும் வரை, தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறையைத் தொடங்காது என்று மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலைத் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் புதன்கிழமை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மருத்துவ கவுன்சலிங் எப்போது தொடங்கும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தைத் தொடர்புக் கொண்டனர்.
இந்தநிலையில், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ஜே.சங்குமணி, “இப்போது மாணவர் சேர்க்கையை துவங்க முடியாது. மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு (NEET) செல்லுபடியாகுமா என்பது எங்களுக்குத் தெரியாது. கவுன்சிலிங் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த விதிமுறைகள் இல்லாமல் எங்களால் தகுதி அல்லது சேர்க்கை அட்டவணையை வெளியிட முடியாது," என்று கூறியுள்ளார் என டி.ஓ.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், “இந்த ஆண்டுக்கான மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை கூட எங்களிடம் இல்லை. அரசு கல்லூரிகளில் இடங்கள் அதிகரிப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் சுயநிதிக் கல்லூரிகள் அல்லது அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. தமிழகத்தில் ஐந்து மருத்துவக் கல்லூரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இளங்கலை படிப்புகளைத் தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்ததாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், மருத்துவ ஆணையத்தின் முடிவு அரசுக்கு அனுப்பப்படவில்லை” என்று மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய மருத்துவ ஆணையம் அனுமதித்துள்ள ஐந்து கல்லூரிகளில், சுயநிதிக் கல்லூரிகள், அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளன. எனவே தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சீட் மேட்ரிக்ஸை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை சரிபார்ப்பதற்காக வழங்குமாறு தேசிய தேர்வு முகமையிடம் கேட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ”ஒரு மாணவர் தனது நீட் தேர்வு மதிப்பெண்ணை உள்ளிடும்போது அல்லது மதிப்பெண் அட்டையை சமர்ப்பிக்கும் போது, அதை தேசிய தேர்வு முகமை எங்களுக்கு வழங்கும் மூல தரவு மூலம் சரிபார்க்கிறோம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சரிபார்க்க முடியாத நிலையில், விண்ணப்பங்களை வெளியிட்டு என்ன பயன்" என்று தேர்வுக் குழு உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“