தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து முதல் 15 வேலை நாட்களில் அனைத்து வகுப்புகளிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கைப் பெற்றனர். மேலும் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு மாதத்தில் மாணவர் சேர்க்கை 1.17 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவச் சேர்க்கையை கடந்த மார்ச் 1-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.
சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப் பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்கள் சேருவதை உறுதி செய்வதற்காக, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துமாறு ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு நடத்தும் பள்ளிகளில் சேர ஊக்குவிக்கும் வகையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல்வர் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், புதுமை பெண், தமிழ்ப் புதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற முயற்சிகள் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.