இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 11,350 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 6 தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி நிறைவடைந்தது. மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இந்தநிலையில், மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதியை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது;
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
மருத்துவ கலந்தாய்வுக்காக போலி ஆவணங்களை அளித்த 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.