தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு இதுவரை 2,11,283 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிஇ, பிடெக் போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளில் உள்ளசுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6 ஆம் தேதி தொடங்கியது.
அதன்படி, மே 27 ஆம் தேதி மாலை 6 மணி வரை 2,11,283 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரி கூறுகையில், ‘மொத்தம் பதிவு செய்தவர்களில், 1,27,663 மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்துதல் மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றுதல் உள்ளிட்ட அனைத்து பதிவு முறைகளையும் முடித்துள்ளனர்.
பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 6 ஆம் தேதி என்பதால், குறைந்தது 1.30 லட்சம் மாணவர்கள் அதற்குள் அனைத்து பதிவு முறைகளையும் முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவு முறை முடித்த பிறகு, ஜூன் 12-ஆம் தேதி மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் ஒதுக்கப்பட்டு, ஜூன் 13 முதல் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும்.
இதற்கிடையில், மோசமான இணைய வசதி காரணமாக ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் கிராமப்புற மாணவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்பு சேவை மையத்தை அணுகலாம். மையங்களில் உள்ள அலுவலர்கள், பதிவு செயல்முறை தொடர்பாக மாணவர்களுக்கு அனைத்து வழிகளிலும் இலவசமாக உதவுவார்கள்.
சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்ததும், ஜூலை 10ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இருப்பினும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) கல்வி அட்டவணையின்படி பொறியியல் கவுன்சிலிங் தேதிகள் அறிவிக்கப்படும்”, என்று அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“