தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய் நடந்து வருகிறது.
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 27) சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்கியது.
கலந்தாய்வு பணிகளை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சாந்தி மலர் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்தில் 36 அரசு கல்லூரிகள், 21 சுய நிதி கல்லூரிகள் 4 தனியார் கல்லூரிகள் உள்ளன. 15% அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீடு தவிர மற்றவைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
விளையாட்டு பிரிவு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவுக்கும் கலந்தாய்வு முடிந்துள்ளது. 25,856 பேர் பொது பிரிவுக்கும், 13,176 பேர் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு 223 இடங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் 93 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர் அவர்களில் 80 பேர் தான் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை குறைவான அளவு இருப்பதற்கு அவர்கள் வேறு துறையில் விருப்பம் இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.
தகுதி பெற்றிருக்கக் கூடிய 80 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் மருத்துவ இடம் கட்டாயம் கிடைக்கும்.
தமிழகத்தில் முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன, அகில இந்திய கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் 4 ஆம் தேதி சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய இடம் தமிழ்நாடு கல்லூரிகளில் கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தான் நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம். அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் நல்ல பயிற்சி தான் கொடுக்கப்படுகிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு கடைசி நாள் வரும் 29ஆம் தேதி என தெரிவித்துள்ளனர். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு 31 ஆம் தேதி கடைசி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு நாள்களில் யோசித்து முடிவு செய்யலாம். இந்த ஆண்டு அரசு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீடுக்கும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சாந்திமலர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.