தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்து, விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேநேரம், 7,951 பள்ளி மாணவர்கள் மற்றும் 1,009 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8,960 பேர் தேர்வெழுதவில்லை.
தேர்வு நிறைவு பெற்றதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 6 ஆம் தேதி தேர்வு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டப்படி தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://tnresults.nic.in/ என்ற பக்கத்தில் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
இதுதவிர மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு நேரடியாக எம்.எம்.எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“