தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 11) நடைபெற்ற வேதியியல் தாள் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 29 முதல் மார்ச் 22 வரை நடைபெறுகின்றன. இந்தநிலையில், இன்று வேதியியல் தாள் நடைபெற்றது.
12 ஆம் வகுப்பு வேதியியல் தாள் சற்று எளிதாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். பாடத்திற்கு உள்ளே இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தாலும், எளிமையாக விடையளிக்கும் வகையில் இருந்தது. அதேநேரம், எளிமையாக கேட்கப்பட்டிருந்தாலும், எதிர்பாராத கேள்விகளாக இருந்தது.
வழக்கமாக பாடங்களுக்கு பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களில் இருந்து அதிகமாக கேள்விகள் எதிர்ப்பார்க்கப்படும். ஆனால் குறைவான எண்ணிக்கையிலே வினாக்கள் இடம்பெற்றிருந்தன. பாதிக்கும் மேலான வினாக்கள் பாடங்களுக்கு உள்ளிருந்து இடம்பெற்றிருந்தன.
ஒரு மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரையில், 15 வினாக்களில் பாதிக்கும் மேலான வினாக்கள் பாடங்களுக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டன. இதேபோல், 3 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்களிலும் பாடங்களுக்கு உள்ளிருந்து பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. கேள்விகள் பாடங்களுக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தாலும் எளிதாக விடையளிக்கும் வகையிலே இருந்தன.
முழுத் தேர்வும் எளிமையாக விடையளிப்பதாகவே இருந்தது. 3 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளிக்க அதிக நேரம் தேவைப்படவில்லை. மாணவர்கள் அதிகமாக எழுத வேண்டிய தேவையில்லாமல், சமன்பாடுகள், வழிமுறைகள் மூலம் எளிதாக விடையளிக்கும் வகையில் இருந்தது. அதாவது குறைவான நேரத்தில் விரைவாக விடையளிக்கும் வகையில் அமைந்தது. எனவே மாணவர்களுக்கு தேர்வுக்கு போதிய நேரம் இருந்தது. ஒரே ஒரு 5 மதிப்பெண் வினா மட்டுமே சற்று விரிவாக நீளமாக விடையளிக்க வேண்டியதாக இருந்தது.
கடந்த ஆண்டு வினாத்தாள்களில் இருந்து வினாக்கள் இடம்பெறவில்லை. அதாவது ரிப்பீடட் கேள்விகள் இல்லை. மேலும் பாடங்களுக்கு பின்னால் உள்ள பயிற்சி வினாக்களை மட்டும் அதிகம் நம்பியிருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றம். அதேநேரம் பாடங்களை பரவலாக, முழுமையாக படித்தவர்களுக்கு இந்தத் தேர்வு ரொம்ப ஈஸி. ஒட்டுமொத்தமாக தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“