/tamil-ie/media/media_files/uploads/2022/12/exam.jpg)
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறும். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வு இயக்ககம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளை சேர்த்து மொத்தமாக 25,57,354 பேர் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர். 11-ம் வகுப்பு தேர்வை 3,89,423 மாணவர்கள், 4,28,946 மாணவிகள், 4,755 தனித்தேர்வர்கள், 137 கைதிகள் என மொத்தம் 8,23,261 பேர் எழுதவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வை 4,46,411 மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள், 272 கைதிகள் என 9,13,036 பேர் எழுதுகின்றனர்.
11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு 3,316 மையங்களும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இவை தவிர, தேர்வு கண்காணிப்பு சிறப்பு படைகள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் விவரங்களையும் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், மார்ச் 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதனையடுத்து, தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை அரசு தேர்வுத்துறை உறுதி செய்து இருக்கிறது.
இந்தநிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வு பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல் துறைக்கும், தேர்வு மையங்களின் போதுமான அடிப்படை வசதிகளை செய்துதர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை (9498383075, 9498383076) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுத் தேர்வு தொடர்பான கட்டுப்பாடுகளையும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அந்தவகையில், தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வருவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆசிரியர்களுக்கும் தேர்வறையில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் தேர்வர்கள், ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
விடைத்தாள்களில் தேர்வு எண், பெயர், சிறப்பு குறியீடுகள் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.
தேர்வு நேரங்களில் தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு தக்கவாறு தண்டனைகள் வழங்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் '14417' என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.