தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நடைபெறவுள்ள பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தையும், மாணவர்கள் சராசரி மதிப்பெண்களையும் அதிகரிக்க தேவையான செயல் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகும். இதற்கான வழிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் மாநில, மாவட்ட, பள்ளி வாரியான செயல்திறன்கள், 2023-24 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுடன் ஒப்பீடு செய்யப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எந்தெந்த பள்ளிகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் இந்த அறிக்கை உதவியாக இருக்கும்.
இதையடுத்து தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் தேர்ச்சி, சராசரி மதிப்பெண்கள் ஆகியவற்றை அதிகரிப்பதற்கான செயல் திட்டங்களை வகுக்க இயலும். இதுகுறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
அதில் மாவட்ட ஆட்சியரையும் பங்கேற்க அழைப்பு விடுக்கலாம். இந்த கூட்டத்துக்கு முன்பாக மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான தேர்ச்சி அறிக்கைகள் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது அவசியம். பொதுத்தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க என்னென்ன செயல் திட்டங்கள் உள்ளன என்பதை தலைமை ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்டறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.