தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களின் நலன்கருதி, பள்ளிக் கல்வித்துறை, நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கவும், முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தவும் முடிவெடுத்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களை தொழில்நுட்பத்துக்கு இணையாக வைத்திருக்க, ஆசிரியர் நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்களின் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஆசிரியர் சமூகத்தை கௌரவிப்பதும் இந்த முயற்சியின் இந்த நோக்கமாகும்.
முதற்கட்டமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவை கழகம் மூலம் ஆசிரியர்களுக்கு 79,723 டேப்லெட்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 55,478 டேப்லெட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், ஆசிரியர்களுக்கான மற்றொரு நலத்திட்டம் முழு உடல் பரிசோதனை திட்டமாகும். அறிவிப்பின்படி, ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். முதற்கட்டமாக நடப்புக் கல்வியாண்டில், 50 வயதுக்கு மேற்பட்ட 35,600 ஆசிரியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். இரண்டு திட்டங்களும் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“