தமிழக அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை ஜூலை 25 ஆம் தேதி நடத்துமாறு பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் (School Management Committee) கூட்டம் கடந்த அக்டோபர் முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு மாதமும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டின் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூலை 25 ஆம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை பள்ளிகள் தீர்மானமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.
மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உள்ள கற்றல் திறன் குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்க வேண்டும். கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து, பெற்றோருடன் ஆலோசித்து, உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பள்ளி மேம்பாட்டுக்காக, முன்னாள் மாணவர்களிடம் பொருள், தொகை பெற்றதை, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பு, துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதித்து, சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஸ்லாஸ் தேர்வு, திறன் இயக்க பயிற்சி, எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடி கல்வி, உயர் கல்வி வழிகாட்டி, இடை நிற்றல் கணக்கெடுப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும். அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.