புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் வரும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப்பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்ககம் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
757 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தற்போது வழிவகையில்லை. ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல் (Deployment) செய்யப்பட வேண்டும்.
தற்போது பட்டதாரி ஆசிரியர் 2000 பணியிடங்களை நிரப்பி தேர்வு செய்யப்படும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாகவுள்ள கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இந்த மாவட்டங்களில் தேர்வர்களை முதலில் நியமனம் செய்யும் போது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இம்மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் எனும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட வேண்டும். அதோடு, மேற்காணும் அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவைப்படும் பள்ளிகளுக்கு முதலில் பணியிட மாறுதல் வழங்கவேண்டும். இந்த பணிகளை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் 30-ம் தேதிக்குள் முடித்து, அதன் பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவின்படி வரக்கூடிய காலங்களில் அனைத்தும் நடைபெற வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“