தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக ச.கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் குமரகுருபரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி இன்றுடன் (ஜூன் 30) பணி ஒய்வு பெறுகிறார். 2023 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி இயக்குநரான அறிவொளி ஓராண்டு பணிக்கு பின்னர் இன்று ஒய்வு பெறுகிறார். கல்வித் துறையில் சுமார் 30 ஆண்டுகாலம் பணியாற்றிய அறிவொளி, துறைசார்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறையின் புதிய இயக்குநராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இயக்குநராகவும், தேர்வுத் துறை இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா, தொடக்கக் கல்வி இயக்குநராகவும் பணியிட மாறுதல் செய்யப்படுகின்றனர். இதேபோல், மாநில கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக உள்ள ந.லதா, தேர்வு துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து கொள்வார்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பு ஏற்கவுள்ள கண்ணப்பன், ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த மூத்த அதிகாரி ஆவார். கண்ணப்பன் 1994 ஆம் ஆண்டு மாவட்டக் கல்வி அலுவலராக தனது பணியை தொடங்கியவர். பின்னர் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர், பொது நூலகத் துறை இயக்குநர் உட்பட துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். கண்ணப்பன் பொது நூலகத் துறை இயக்குநராக இருந்தபோது அண்ணா நூற்றாண்டு நூலக கட்டுமானப் பணிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“