தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தயாராகி வருகின்றனர். வெயில் காரணமாக பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள்: இந்தியாவில் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள்; 8195 எம்.பி.பி.எஸ் இடங்களும் புதிதாக சேர்ப்பு
இந்நிலையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது. நடப்பு கல்வி ஆண்டு முதல் 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்காது என்றும், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு ஏற்படும் பணிச்சுமை உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil