2021-22 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர்களாக இடமாற்றம் செய்யப்பட்ட 500 பேருக்கு 2024-2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றிய 500 ஆசிரியர் பயிற்றுநர்கள், 2021-22 ஆம் கல்வியாண்டில், பட்டதாரி ஆசிரியர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த பணியிட மாற்றத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான உத்தரவின் அடிப்படையில், ஆசிரியர் பயிற்றுநர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக கடந்த 2021-22 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இடமாற்றம் செய்யப்பட்ட 500 பேருக்கு, பொது இடமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க அனுமதி கோரி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கை கவனத்துடன் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்படி, 2021-22 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர்களாக இடமாற்றம் செய்யப்பட்ட 500 பேருக்கு 2024-2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க அரசு அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“