1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், காணொளி வாயிலாக அனைத்து பாடங்களின் கருப் பொருளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், விளக்கப் படங்களாக உருவாக்கி, ஒரு செயலியின் மூலம் கிடைக்கப்பெறும் வகையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மணற்கேணி செயலியை வடிவமைத்துள்ளது.
தாம்பரம் அடுத்த சேலையூர், அரசு மேல் நிலைப் பள்ளியில் நேற்று (ஜூலை 25) நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இச்செயலியை அறிமுகம் செய்தார்.
மணற்கேணி செயலியில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் பாடங்கள் விளக்கப் படங்களாக கொடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக 12-ம் வகுப்பின் முதல் பருவப் பாடங்கள் மற்றும் 6 முதல் 11-ம் வகுப்பிற்கான பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தொடக்க கல்வி மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயலி விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக டவுன்லோடு செய்யலாம். ‘TNSED Student’ எனத் தேடி இச்செயலியை டவுன்லோடு செய்யலாம். நாட்டிலேயே முதல் முறை தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இது போன்று செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "பள்ளிக் கல்வித்துறையில் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அதில் முத்தாய்ப்பான திட்டமாக மணற்கேணி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் மாணவர்கள் எந்த பாடத்தையும் விட்டுவிடாமல் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், வசதி செய்யப்பட்டு உள்ளது. வெறும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதைக் காட்டிலும் புரிதல் தன்மையோது அறிவைக் கொண்டு புரிந்து கொண்டு பாடங்களைப் படிக்க வேண்டும். செயலியில் பாடம் நடத்தும் ஆசிரியர் மட்டுமில்லாமல் 2டி. 3டி, அனிமேஷனில் அதை விளக்கும் விதமாக வீடியோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியில் ஒரு பாடம் முடிந்த பின் 15 வகையான கேள்விகள் கேட்கப்படும். கற்றல் அறிவை சோதிக்கும். கற்றல் செயல்பாட்டை மிக மகிழ்ச்சிகரமாக்கும் இந்த செயலி இலவசமாக வழங்கப்படுகிறது" என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், UNCCD துணைப் பொதுச் செயலாளர் அல்லது நிர்வாகச் செயலாளர் இப்ராஹிம் தயாவ் , பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு மாதிரிபள்ளிகள் சங்க உறுப்பினர் சுதன், உட்பட கல்வித் துறையின் உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.