/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-nadu-schools-1604658347.jpg)
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெயர்ப் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும், திருத்தங்கள் மேற்கொள்ள பல வாய்ப்புகளும் அளிக்கப்பட்ட நிலையிலும் கூட, சில பள்ளிகளின் பெயர்ப் பட்டியல்களில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இது, தேர்வு முடிவு வெளியிட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி இவ்வலுவலகத்தில் பெறப்படும் கடிதங்கள் வாயிலாக தெரிய வருகிறது.
எனவே, தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தேர்வர்களது (தலைப்பெழுத்து, பெயர் (ஆங்கிலம், தமிழ்), தாய் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மதிப்பெண் பட்டியலில் தேர்வர்களது தலைப்பெழுத்து, பெயர் (ஆங்கிலம், தமிழ்), பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி மொழிப்பாடம் ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரியாக பல முறை மாணவர்களது பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும், மதிப்பெண் சான்றிதழ் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது ஒரு நிகழ்வாக உள்ளது. இது மாணவர்களுக்கு சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன் முக்கியத்துவத்தை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, மேற்குறிப்பிட்டுள்ள இனங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பின், தலைமை ஆசிரியர் மாணவரின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சான்றொப்பமிட்டு அதனை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 13.06.2025 அன்று பிற்பகல் 5 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேர்வர்களது நலன் கருதி, பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள்அச்சிடுவதற்காக வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்பட்ட பிறகு, சான்றிதழில் திருத்தம் செய்யக் கோரி இவ்வலுவலகத்திற்கு மனுக்கள் அனுப்புதல் கூடாது. இந்தப் பணிக்கு அதி முக்கியத்துவம் அளித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.