12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனையடுத்து பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றிருந்தார்.
இந்தநிலையில், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி ஜூலை 1 ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், பிளஸ் 1 துணை தேர்வு ஜூலை 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 24 ஆம் தேதி மொழித் தேர்வு, 25 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு, 26 ஆம் தேதி பயோ-கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், சமூக அறிவியல், ஹோம் சயின்ஸ், புள்ளியியல், பேசிக்ஸ் எலக்ரிக்கல் இஞ்சினியரிங், ஜூன் 27 ஆம் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல், ஜூன் 28 ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி தேர்வுகள் நடக்கவுள்ளது.
மேலும் ஜூன் 29 ஆம் தேதி உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம், பேசிக் சிவில் இஞ்சினியரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ், பேசிக் மெக்கானிக்கல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஜூலை 1 ஆம் தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயோலஜி, டெக்ஸ்டைல் மற்றும் ட்ரஸ் டிசைனிங், விவசாய அறிவியல், நர்சிங் ஆகிய தேர்வுகள் நடக்கவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“