அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. கலந்தாய்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 19 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை இன்று (ஜூன் 26) வெளியிட்டது.
அதன்படி, மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 29 ஆம் தேதி முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகும். தொடர்ந்து அனைத்து விதமான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் என்றளவில் 4 சுற்றுகளாக ஜூலை 1 முதல் 8 ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி அனுமதி வழங்கப்படாது. மாறாக, தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டு கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். வழிகாட்டுதல்களின்படி தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மேலும், கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.