/indian-express-tamil/media/media_files/2025/05/30/LipD43VThgEKGSt39gJz.jpg)
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை ஆசிரியர் பணி இடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) கடந்த 1 ஆம் தேதி நிலவரப்படி, பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை ஆசிரியர் பணி இடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 24 பாட வேளைகளும், இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளர் நிர்ணயம் செய்ய வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதத்தை பின்பற்ற வேண்டும். மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சியாக இருப்பின் 30 மாணவர்களும், ஊரகப்பகுதியாக இருந்தால் மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், பணி நிர்ணயம் செய்யும்போது மொழிப்பாடத்தில் 24 பாடவேளைக்கும், முதன்மை பாடத்தில் 28 பாடவேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம். இதுதவிர ஒரு பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து அதில் ஒரு பணியிடம் உபரியாக இருப்பின் அதில் பணியாற்றுபவர்களில் இளையோரை உபரியாக காண்பிக்க வேண்டும்.
ஒருமுறை பணி நிரவல் செய்த ஆசிரியர்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் மாற்றம் செய்யக் கூடாது. அதேநேரம் பணி நிரவல் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர் இந்த ஆண்டும் விருப்பம் தெரிவித்தால் அவரை தற்போதைய பணியாளர் நிர்ணயத்தின்போது உபரியாகக் காண்பிக்கலாம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதுநிலை ஆசிரியர்களை பணி நிர்ணயம் செய்து அதன் விபரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.