2025 – 26 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2025 – 26 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின் (2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/ அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள்,” என பதிவிட்டுள்ளார்.