/indian-express-tamil/media/media_files/2025/09/07/anbil-mahesh-nehru-teacher-2025-09-07-17-21-24.jpeg)
திருவெறும்பூர் அருகே காட்டூர் தனியார் பள்ளி வளாகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 10,12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ -மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 38 மாவட்டங்களிலிருந்தும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலை/உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2982 பேர் மற்றும் தமிழ் பாடத்தில் 100% மதிப்பெண் பெற்ற மாணவ / மாணவிகள் 142 பேர் என மொத்தம் 3124 பேருக்குபாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை வகித்து பேசியதாவது; பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இல்லம் தேடி கல்வி, தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு, உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு புதுமைப்பெண், படித்த பின்னர் நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நகராட்சி நிர்வாக துறை சார்பில் பழுதடைந்த பல்வேறு பள்ளி கட்டமைப்புகள் சீரமைத்து புதிதாக கட்டி தரப்பட்டுள்ளது.
கற்றல் கற்பித்தல், ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்களை அழைத்து அவர்களுக்கு விழாக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் பள்ளி கல்வித்துறையில் நடத்தப்படுகிறது. தற்போது 324 பள்ளிகளில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள மாணவ மாணவிகள் கல்வி தரத்தை உயர்த்தி வீட்டையும் நாட்டையும் உயர்த்துவார்களாக இருக்க வேண்டும் என்றார்.
தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது; இன்றைய நாள் உங்களுக்கு ஒரு அங்கீகாரம் ஆகும். ஒரு மனிதன் மற்ற மனிதனுக்கு அங்கீகாரம் வழங்குவது ஊக்கம் தரும். அண்ணா பேராசிரியர் கனவு விருது என்று விருதுகள் ஆசிரியர் பெருமக்களுக்கு வழங்கப்படும் பொழுது துறை சார்ந்த அமைச்சர் என்ற நிலையில் நானும் சக பள்ளிகல்வி துறை அலுவலர்களும் முதல் ஆளாக வந்து நிற்போம். இதுபோன்று 2024 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரை கலந்து கொண்டார்.
தமிழக முதல்வர் ஜெர்மனி, லண்டன் ஆகிய நாடுகளுக்கு சென்று 15,500 கோடி முதலீடுகளை பெற்றுள்ளதுடன் 17,600 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அந்தப் பணி வெற்றியடைய நாம் வாழ்த்துவோம்.
பள்ளிக்கல்வித்துறை மூலம் தமிழகத்தில் உள்ள 2231 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது. வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக டி.என் ஸ்பார்க் சமூக வலைத்தளம் உள்ளது. ஆசிரியர்கள் ஸ்மார்ட் போர்டு கொண்டு வருவதால் பாராட்டுகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழா தற்பொழுது நடைபெறுகிறது. தாய் மொழியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவது சாதாரண விஷயம் அல்ல. மற்ற பாடங்களில் பெற்றுவிடலாம், கடந்த ஆண்டு 40 பேர் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 142 பேர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதற்கு புலமை, ஆர்வம், ஈடுபாட்டுடனும் அவர்கள் படிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு இந்த பாராட்டு ஒரு நாள் மட்டுமே, உங்களிடம் கல்வி கற்றவர்கள் மேற்கல்வி மற்றும் வேலைக்கு செல்லும் பொழுது பெறக்கூடிய பாராட்டுக்களும் உங்களையே சேரும். தமிழக முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் அறிவித்து செயல்படுத்துவதற்கு நீங்கள் தான் காரணம். இது போல் மற்ற துறைகளுக்கு விழா நடத்துவதற்கு எனக்கு ஆசை உள்ளது. அதற்கான காலமும் நேரமும் கனிந்து வரும்பொழுது நிச்சயம் நடக்கும். கலைஞரின் நூற்றாண்டு விழா நூலகம் கட்டி முடிக்கப்பட்டு அதில் மாணவர்கள் படிக்க செல்லும் பொழுது, நானும் ஒரு வாசகனாக மாறிவிட்டேன் என மாணவர்கள் பாராட்டுகின்றனர்.
இந்த அனைத்து பாராட்டுகளுக்கும் காரணமாக ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள். இன்று தலைமை ஆசிரியர்களை பாராட்டுகிறோம், ஏனென்றால் ஆசிரியர்கள் மட்டுமல்ல அந்த பள்ளியில் நீங்களும் சேர்த்து தான் மாணவர்களை நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி செய்ய வைத்த எல்லா ஆசிரியர்களையும் சாரும். கடந்த இரண்டு மாதத்தில் 28 மாவட்டத்தில் பள்ளிகளில் ஆய்வு செய்த பொழுது சில இடங்களில் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்துள்ளது. அது வரும் காலத்தில் நிவர்த்தி செய்யப்படும், மேலும் இன்னும் 12 மாவட்டங்களில் விரைந்து ஆய்வு செய்யப்படும்.
எனது தலைமை ஆசிரியரான தமிழக முதல்வரிடம் பள்ளிக் கல்வித்துறை பொற்காலம் என்ற பெருமை பெற்றுள்ளதற்கு காரணம் நீங்கள் எல்லாம் தான். இந்த விழா முடிந்து கவனமாக நீங்கள் அனைவரும் ஊர் செல்ல வேண்டும், நீங்கள் தனிப்பட்ட சொத்து அல்ல தமிழகத்தின் சொத்து ஆகும் என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.