வரும் 19-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், "பள்ளிகளில் மாணவர்களுக்கான சுகாதார முகாம்களை நடத்தவும், பள்ளி நேரத்தில் போதுமான பொது போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்யவும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது.
இதுகுறித்து, பள்ளிகல்வி செயலாளர் தீரஜ் குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில், " மீண்டும் திறக்கப்பட்ட பின், சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
உள்ளூர் அளவிலான மருத்துவ ஊழியர்களை சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போதுமான அளவுக்கு எச்சரிக்கை முறையில் வைத்திருக்கவும், பள்ளிகள் திறந்த பின் மாணவர்களுக்கு வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு துத்தநாகம் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை சுகாதாரத் துறையால் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூராட்சி அமைப்புகள் மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்வதையும், சமூக நலத்துறை வழங்கிய நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி மாணவர்களுக்கு மதிய உணவு விநியோகம் செய்வதையும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கண்காணிக்க கடிதம் கேட்டுக் கொண்டது.
முன்னதாக, முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், பள்ளிகளில் ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் அமர்ந்திருக்கவும், கோவிட்-19-க்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவும் அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின், பள்ளி மாணவர்களுக்கான தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதர வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.